சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் மடானி கூட்டுறவு தீபாவளி சிறப்பு விற்பனை; 50% கழிவு விலைச் சலுகை

சுங்கை பூலோ, அக்டோபர்-12,
வரவிருக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், தொகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், மடானி தீபாவளி சிறப்பு விற்பனையை ஏற்பாடு செய்தார்.
JMKU எனப்படும் அந்த மடானி கூட்டுறவு மற்றும் தொழில்முனைவோர் விற்பனை, கோத்தா டாமான்சாரா, செக்ஷன் 7 பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இத்திட்டத்தின் மூலம், மக்கள் அதிகபட்சம் 50% தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க முடிந்தது; இது மலேசியாவில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த விலை தள்ளுபடியாகும்.
இந்த மலிவு விற்பனை ஒவ்வொரு விழாக்காலத்தின் போதும் சுங்கை பூலோ தொகுதியில் விடாமல் நடைபெறுகிறது.
கோத்தா டாமான்சாரா மற்றும் பாயா ஜெராஸ் ஆகிய இடங்களில் அது நடத்தப்படுகிறது.
மக்களின் வாழ்கைச் செலவைக் குறைக்க, குறிப்பாக தீபாவளி ஏற்பாடுகளில் இருக்கும் இந்தியச் சமூகத்திற்கு உதவும் நோக்கில் இம்முறை அது நடத்தப்பட்டதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சருமான ரமணன் தெரிவித்தார்.
“மடானி கொள்கைக்கு ஏற்ப மக்கள் நேரடியாக பயனடைய வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம் என்றும் இதுவே மக்களுக்கான பொருளாதாரம்”
என்று ரமணன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், SKM எனப்படும் மலேசியக் கூட்டுறவு ஆணையம் வழங்கிய உணவு கூடைகளையும் தேவைப்படும் இந்திய குடும்பங்களுக்கு ரமணன் வழங்கினார்.
இதுவரை நடைபெற்ற JMKU Aidilfitri மற்றும் JMKU Hari Koperasi Negara உள்ளிட்ட ஏழு தொடர் நிகழ்ச்சிகள் மூலம், ரமணனின் தனிப்பட்ட நிதியுதவி RM205,000-தை கடந்துள்ளது.
அரசாங்கம், அரசு நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கிடையிலான இது போன்ற அணுக்கமான ஒத்துழைப்பின் மூலம்,
சுங்கை பூலோ தொகுதி, MADANI திட்டத்தின் கீழ் சிறந்த சமூக பொருளாதார வளர்ச்சி மாதிரியாக மாறும் என்னும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.