
ஷா ஆலாம், மார்ச்-11-பூச்சோங், தாமான் கின்றாராவில் சமூக ஆர்வலர் Cikgu Chandra வீட்டில் நடத்தப்பட்ட நாசவேலை தொடர்பான விசாரணையில் போலீஸாருக்கு புதியத் துப்புக் கிடைத்துள்ளது.
எனினும், விசாரணைத் தொடருவதால், அதனைத் தற்போதைக்கு வெளியிட முடியாது என, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Shazeli Kahar தெரிவித்தார்.
சம்பவம் குறித்து புகார் பெறப்பட்ட கையோடு விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டதாகக் கூறிய அவர், நியாயமாகவும் வெளிப்படையாகவும் விசாரணை நடைபெறுவதாக உத்தரவாதம் அளித்தார்.
இந்நிலையில், 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட அம்சங்களைத் தொடும் நிந்தனைக்குரிய அல்லது சினமூட்டும் கருத்துகளையோ, யூகங்களையோ பரப்ப வேண்டாமென்றும் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இன-மத விவகாரங்கள் மோசமடைந்து நிலைமைக் கைமீறி போவதைத் தடுக்க, அவைக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
மீறினால், தக்க நடவடிக்கைப் பாயுமென்றும் Shezeli எச்சரித்தார்.
Cikgu Chandra வீட்டில் நிகழ்ந்த முதல் சம்பவத்தில், முகமூடி அணிந்தும் பாராங் கத்தி ஏந்தியும் வந்த மர்ம நபர்கள், அவரின் கார் கண்ணாடியை உடைத்து, வீட்டு இரும்பு வேலியையும் சேதப்படுத்தினர்.
பின்னர், விடியற்காலை 3 மணிக்கு மேல் மீண்டும் அக்கும்பல் அங்கு வந்து பெட்ரோல் குண்டை வீசி, 1 காரை முற்றாக அழித்த வேளை, மேலுமிரு கார்களைச் சேதப்படுத்தியது.
நல்லவேளையாக அதில் காயமேதும் ஏற்படவில்லை.



