
கோலாலம்பூர், ஏப் 8 -செராஸ் தாமான் செம்லினில் உள்ள பொழுது போக்கு மையம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமையன்று அத்துமீறி நுழைந்து வன்செயலில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்கு உதவியாக அவர்கள் அனைவரையும் தடுத்து வைக்கும் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சுஸ் ( Fadil Marsus) தெரிவித்தார்.
இந்த கலவரத்தின்போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சில வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தைக் கண்டறியும் விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தண்டனைச் சட்டத்தின் 427 ஆவது மற்றும் 148 ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்ட வருவதாக அவர் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில், பொழுதுபோக்கு மையத்தில் ஒரு கும்பல் சம்பந்தப்பட்ட தகராறு குறித்து தனது தரப்புக்கு தகவல் கிடைத்ததாக Fadil வெளியிட்ட ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.
ஒரு கும்பல் லாரியைப் பயன்படுத்தி வளாகத்தின் நுழைவாயிலில் மோதி, உள்ளே புகுந்து, வளாகத்திற்குள் இருந்த பொருட்களை உடைத்து நாசவேலையில் ஈடுபட்டது.
அதற்கு முன்னதாக, சுமார் 60 வினாடிகள் கொண்ட ஒரு காணொளிப் பதிவு வைரலானது. அதில், ஒரு லாரி பின்னோக்கி வந்து வளாகத்தின் வேலியில் மோதுவதும், அதைத் தொடர்ந்து முகமூடி அணிந்த சுமார் 50 பேர் கொண்ட கும்பல் அடையாளம் தெரியாத பொருட்களை ஏந்தியபடி சேதமடைந்த நுழைவாயில் வழியாக வளாகத்திற்குள் நுழைவதும் பதிவாகியிருந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வளாகத்தில் இருந்த பல உபகரணங்கள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.



