
கோலாலம்பூர், ஜூலை 28 – நேற்று, செராசிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முதலை தோல் உட்பட வெளிநாட்டு விலங்குகளின் தோல்களால் செய்யப்பட்ட 500,000 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட மதிப்பிலான கைப்பைகள் மற்றும் பெல்ட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பாதுகாக்கப்பட வேண்டிய வனவிலங்கு தோல்களிலிருந்து வடிவமைக்கப்பட்ட பல்வேறு பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததற்காக மூன்று உள்ளூர்வாசிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையின் (பெர்ஹிலிடன்) அமலாக்க பிரிவு அதிகாரிகள், PGA பட்டாலியன் 19 அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்ட இச்சோதனையில் 86 கைப்பைகள் மற்றும் 14 பெல்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணைக்கு பின்பு சந்தேக நபர்கள் அனைவரும் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அதே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் மேல் விசாரணைக்காக பெர்ஹிலித்தான் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
செல்லுபடியாகும் அங்கீகாரம் இல்லாமல் வனவிலங்கு சார்ந்த பொருட்களை வர்த்தகம் செய்வது சட்டப்படி குற்றம் என்றும், தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளனர்.