தைப்பே, டிசம்பர்-22, தைவானில் செல்ஃபி எடுப்பதில் மும்முரம் காட்டிய மாது இரயிலில் அரைப்படுவதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ வைரலாகியுள்ளது.
டிசம்பர் 14-ஆம் தேதி அங்குள்ள பிரபல மலைப்பகுதியொன்றில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தண்டவாளத்திலிருந்து வெறும் 1 அங்குல தூரத்தில் நின்றவாறு சிரித்த முகத்துடன் அவர் செல்ஃபி எடுத்துள்ளார்.
அப்போது பின்னால் வந்த இரயில் ஓட்டுநர், அம்மாதுவை எச்சரிக்கும் வகையில் ஹாரன் அடித்தார்.
ஆனால் அதற்குள் இரயிலின் முன் பகுதி, அம்மாதுவின் தோள்பட்டையை மோதியது.
இதனால் கீழே விழுந்தவர் சிறிது நேரத்திற்கு உடல் அசைவில்லாமல் படுத்திருந்தார்.
அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு உதவ ஓடிய போது, அம்மாது இலேசாகக் காலை அசைத்தார்.
இதையடுத்து உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் 55 வயது அம்மாதுவுக்கு மோசமான காயமேதுமில்லை.
கால் எலும்பு மட்டும் முறிவடைந்துள்ளது.
அம்மாதுவின் செயலால், அவர் உட்பட ஒரு குழுவையே கூட்டி வந்த சுற்றுலா முகவர் நிறுவனத்திற்கு, 45,070 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு, அடுத்த ஓராண்டுக்கு அப்பகுதிக்கு சுற்றுப்பயணிகளை அழைத்து வரவும் தடை விதிக்கப்பட்டது.
நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்த அச்சுற்றுலா நிறுவனம், அம்மாதுவின் செல்ஃபி மோகமே அவ்விபத்துக்குக் காரணம் என்றது.