
சுங்கை பட்டாணி, செப்டம்பர்-4- மலேசியாவில் ஓய்வு பெற்ற பின் அதிகாரப்பூர்வமாகத் தத்தெடுக்கப்பட்ட முதல் K9 மோப்ப நாயாக கோரன் (Goran) வரலாறு படைத்துள்ளது.
கோரன், செக் குடியரசிலிருந்து 2019-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, கடந்த 6 ஆண்டுகளாக அரச மலேசிய போலீஸ் படையில் சேவையாற்றியது.
தற்போது 8 வயதாகியுள்ள இந்த மோப்ப நாய்க்கு, இடுப்பு எலும்பு பிரச்னை இருந்தபோதிலும் விசாரணைகளில் சிறப்பாக செயல்பட்டது.
கடந்தாண்டு கெடா, பாலிங்கில் நடந்த கொலை வழக்கில் சந்தேக நபரின் உடையை கண்டுபிடித்து அவரைச் கைது செய்ய உதவியது இதன் மிகப்பெரிய சாதனையாகும் என, இதுநாள் வரை அதனை பராமரித்து வந்த குவாலா மூடா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த கார்ப்பரல் எம். சிவபாலன் கூறினார்.
ஓய்வு பெறும் நிகழ்வில், கோரன் அதிகாரப்பூர்வமாக செல்லப்பிராணியாகத் தத்தெடுக்கப்பட்டது. இதன் புதியப் பராமரிப்பாளர், பேராக் மாநிலத்தின் கடும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் லீ ஷெங் வேய் (Lee Sheng Wey) ஆவார்.
“இனி கோரன் வீட்டில் சுதந்திரமாகச் சுற்றியும் வெளியே நடைப்பயிற்சி செய்தும் வாழும்; அது கூண்டில் அடைக்கப்படமாட்டாது” என்றார் அவர்.
உள்துறை அமைச்சின் ஒப்புதலுடன் நடத்தப்பட்ட இந்த தத்தெடுப்பு திட்டம், 1968-ல் தொடங்கிய K9 பிரிவின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.