
புத்ராஜெயா, ஜூலை-18- டத்தோ விருதைக் கொண்ட தனது 2 மகன்களை அவதூறு செய்த வழக்கில், கடைசி மேல்முறையீட்டு முயற்சியிலும் 67 வயது தாய் ஒருவர் தோல்விகண்டுள்ளார்.
வெற்றிகரமான வர்த்தகர்களுமான M. நடராஜன், M.சத்திஷ்குமார் ஆகிய இரு சகோதரர்களையும் ஒரு ஃபேஸ்புக் வீடியோ வாயிலாக அவதூறு செய்ததாக, V.T.மேனகா குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
அதில் அவர் அவதூறு செய்திருப்பதை உறுதிச் செய்து செஷன்ஸ் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் நிலைநிறுத்தியது.
அதனை எதிர்த்து மேனகா செய்த மேல்முறையீட்டை, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.
ஓர் இழிவான தலைப்புடன் தமிழில் மேனகா பதிவேற்றிய 30-நிமிட வீடியோ, அவரின் 2 மகன்களின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளது.
எனவே, இருவருக்கும் தலா 100,000 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்குமாறு, நீதிபதி மேனகாவை உத்தரவிட்டார்.
எனினும், 2023-ஆம் ஆண்டு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த 10,750 ரிங்கிட் செலவுத் தொகையைச் செலுத்தாத காரணத்தால் மேனகா திவாலானதாக அறிவிக்கப்பட்டவர் என, நடராஜன் – சத்திஷ்குமார் சார்பில் வழக்காடிய எம். மனோகரன் தெரிவித்தார்.
2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் மேனகா வெளியிட்ட ஃபேஸ்புக் வீடியோவில், தன் மகன்கள் இருவரும் ‘பெரியக் குற்றவாளிகள்’ என்றும், கையெழுத்தை ஏமாற்றி குடும்ப நிறுவனமான Linsun குழுமத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து தம்மை நீக்கியதாகவும் புகார் கூறியிருந்தார்.
அதோடு, கைத்துப்பாக்கியால் தன்னைக் கொலைச் செய்யவும் அவர்கள் திட்டமிட்டதாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.