கோவை, டிசம்பர்-27, சென்னை அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைக் கண்டித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 6 முறை சாட்டையால் தன்னைத் தானே அடித்துகொண்டார்.
கோவையில் உள்ள அவரின் வீட்டின் முன்புறம் இன்று காலை அந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தை அவர் நடத்தினார்.
மேல் சட்டை அணியாமல் பச்சை வேஷ்டியில் 6 முறை தனக்குத் தானே அண்ணாமலை சவுக்கடி கொடுத்துக் கொண்ட போது, சுற்றியிருந்த ஆதரவாளர்கள் வெற்றிவேல் வீரவேல் என முழக்கமிட்டனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், அச்சம்பவத்தை கண்டித்து சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும் தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என்றும் நேற்று அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதோடு இன்று முதல் 48 நாட்களுக்கு விரதம் இருந்து அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
கூறியபடியே இன்று சாட்டையடியை நடத்தி காட்டி தனது கண்டனத்தைத் தெரிவித்தும் உள்ளார்.