Latestமலேசியா

சௌகிட் ‘ஆண்கள் மட்டும்’ spa மையத்தில் கைதான 171 உள்ளூர்வாசிகள் விடுவிப்பு; தடுப்புக் காவல் விண்ணப்பம் நிராகரிப்பு

கோலாலம்பூர், டிசம்பர்-1 – கோலாலம்பூர் சௌகிட்டில் ‘ஆண்கள் மட்டும்’ அனுமதிக்கப்படும் spa ஆரோக்கிய மற்றும் புத்துணர்ச்சி மையத்தில் கைதான 171 உள்ளூர் ஆடவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விசாரணைக்காகத் தடுத்து வைக்க போலீஸ் செய்த விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்ததால், சனிக்கிழமை அவர்கள் விடுதலையாயினர்.

தடுப்புக் காவல் விண்ணப்பம் மிகவும் தாமதமாக செய்யப்பட்டதை காரணம் காட்டி நீதிமன்றம் அதனை நிராகரித்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ Fadil Marsus தெரிவித்தார்.

ஆனால், அதிக எண்ணிக்கையிலானோரை உட்படுத்தியிருந்ததாலும், ஒவ்வொருவரையும் தனித்தனியாக கையாண்டு வகைப்படுத்த வேண்டியிருந்ததாலுமே தாமதம் ஏற்பட்டதாக அவர் விளக்கினார்.

இவ்வேளையில் அவர்களுடன் கைதான 31 வெளிநாட்டு ஆண்கள் 2 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

“ஓரினச் சேர்க்கையுடன் தொடர்புடைய ஒழுங்கீனத்தில் மொத்தமாக 202 பேர் கைதானது சாதாரண விஷயமல்ல. கவலைக்குரிய ஒன்று” என்றார் அவர்.

ஓரினச் சேர்க்கை குற்றங்களுக்கான குற்றவியல் சட்டத்தின் 377, 372-ஆவது சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் விசாரிக்கப்பட்டனர்.

ஆனால், கைதான ஒருவரில் கூட தாங்கள் ‘பாதிக்கப்பட்டவர்’ எனக் கூறவில்லை; எனவே, பாலியல் துன்புறுத்தலோ, விபச்சாரமோ அல்லது இயற்கைக்கு மாறான உடலுறவோ நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை; இந்த நிலையில் வழக்கை மேற்கொண்டு எடுத்துச் செல்வது இயலாத காரியம் என Fadil சொன்னார்.

முன்னதாக போலீஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், அறுவை சிகிச்சை மருத்துவர், அரசுத் துறை அலவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 202 ஆண்கள், இடுப்பில் கட்டிய துண்டோடு கைதானது பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலை அசதியில் உடல் புத்துணர்ச்சிக்காக வந்தவர்கள், இளைஞர்கள், திருமணமானவர்கள், 4 குழந்தைகளுக்குத் தந்தை என அவர்கள் பல இரகமாக இருந்தது சமூக ஊடகங்களிலும் கடும் கண்டனத்தைப் பெற்றது.

இப்படியே விட்டால் ஓரினச் சேர்க்கை கலாச்சாரம் சமூகத்தில் தலைத்தூக்கி விடும் என்றும், அதனை முறியடிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குரல்கள் வலுத்து வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!