Latestசினிமா

‘ஜனநாயகன்’ நாளை வெளிவராது; கொந்தளிக்கும் விஜய் இரசிகர்கள்

 

சென்னை, ஜனவரி-8 – பொங்கல் வெளியீடாக நாளை ஜனவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘ஜனநாயகன்’, தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

படத் தயாரிப்பு நிறுவனமான KVN Productions அறிக்கை வாயிலாக அதனை உறுதிப்படுத்தியது.

 

_”இந்தத் திரைப்படத்தை மிகுந்த உற்சாகத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த இரசிகர்களின் உணர்வுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இந்த முடிவு எளிதானதல்ல. படத்தின் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்”_

 

_”எனவே அதுவரை பொறுமை காத்து தொடர்ந்து ஆதரவு தருமாறு இரசிகர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்”_ என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வேளையில், பிரிட்டனிலும் இப்படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து 260-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் டிக்கெட் விற்பனைகள் நிறுத்தப்பட்டு, பணத்தைத் திருப்பித் தர ஏற்பாடுகள் நடைபெறுவதாக ahimsaentertainment நிறுவனம் தெரிவித்தது.

 

மலேசியாவிலும் ‘ஜனநாயகன்’ நாளை வெளிவராது என, விநியோகஸ்தரான Malik Stream Corporation முன்னதாக அறிவித்திருந்தது.

 

தயாரிப்பு நிறுவனம் முடிவுச் செய்யும் மற்றொரு தேதியில் படம் வெளியாகுமென அது கூறியிருந்தது.

 

படம் ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், தணிக்கை சான்றிதழ் பெறுவதில் தாமதம் நீடித்து வரும் பிரச்னை ஊரறிந்த உண்மையாகும்.

 

இந்தியத் திரைப்படச் சான்றிதழ் தணிக்கை வாரியத்திற்கு எதிராக KVN நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

 

மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடிய, அதிகாரத் தரப்பை தவறாக சித்தரிக்கக் கூடிய காட்சிகள் இருப்பதாவும், அதன் காரணமாகவே மறு தணிக்கைக்கு அனுப்ப முடிவுச் செய்திருப்பதாகவும் தணிக்கை வாரியம் கூறியுள்ள நிலையில், நாளை தீர்ப்பு வரும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

 

இதையடுத்தே படம் ஒத்தி வேறுவழியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

தீவிர அரசியலில் நுழைந்துள்ள விஜய்க்கு இது கடைசி திரைப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த அவரின் இரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

H. வினோத் இயக்கி, அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, போபி டியோல் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.

 

மலேசியாவில் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்ட நிலையில், ‘ஜனநாயகனை’ பொங்கலுக்கு திரையரங்குகளில் கொண்டாடித் தீர்க்க இரசிகர்கள் தயாராகி வந்தனர்.

 

ஆனால், கடைசி நேத்தில் தள்ளிப் போயிருப்பதால் இது ‘அரசியல் சதியே’ என்றும், படம் எப்போது வந்தாலும் நிச்சயம் கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது என்றும் சமூக ஊடகங்களில் விஜய் இரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!