ஜனவரி 1 முதல் ‘Ekspres Selatan’ ரயில் சேவை நிறுத்தம் – KTMB

கோலாலம்பூர், டிசம்பர் 30 –
KTMB நிறுவனம் இயக்கி வந்த Ekspres Selatan ரயில் சேவை, வருகின்ற ஜனவரி 1 முதல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக கெமாஸ், ஜொகூர் பாரு சென்ட்ரல் மற்றும் கெமாஸ் வழித்தடத்தில் இயங்கி வந்த இந்த ரயில், தெற்கு பகுதி பயணிகளுக்கு உதவியாக இருந்தது.
கெமாஸ் ஜொகூர் பாரு மின்சார இரட்டை ரயில் பாதை திட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளதால், ரயில் சேவைகளை மேலும் சிறப்பாகவும் வேகமாகவும் மாற்றும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக KTMB தெரிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல் கெமாஸ் – ஜொகூர் பாரு சென்ட்ரல் இடையே தினமும் எட்டு மின்சார ரயில் சேவைகள் (ETS) முழுமையாக இயக்கப்படவுள்ளதால் பயணிகள் கவலைப்பட தேவையில்லை என்றும் இந்த ரயில்கள் வேகமான, பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஜொகூர் பாரு சென்ட்ரல் – தும்பாட் வழித்தடத்தில் இயங்கும் Ekspres Rakyat Timuran ரயில் சேவை வழக்கம்போல் தொடரும். கெமாஸ் – தும்பாட் இடையே Shuttle Timuran சேவையும் பயணிகளுக்கான மாற்று வசதியாக இருக்கும்.
பயணிகள் புதிய ரயில் நேர அட்டவணைகளை KTMB-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.



