
தோக்யோ, ஏப்ரல்-7- அவசர மருத்துவச் சேவைக்கான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று ஜப்பானின் தென்மேற்கே கடலில் விழுந்து நொறுங்கியதில் இன்னமும் மூவரைக் காணவில்லை.
அறுவரை ஏற்றியிருந்த அந்த ஹெலிகாப்டர் சம்பவத்தின் போது நாகாசாக்கி மாகாணத்திலிருந்து ஃபுக்குவோக்கா சென்றுக்கொண்டிருந்தது. அந்த அறுவரில், விமானி, பொறியியலாளர், மருத்துவர், தாதி, 80 வயது பெண் நோயாளி, உடன் சென்ற 60 வயது ஆடவரும் அடங்குவர்.
இந்நிலையில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. சமிக்ஞையை வைத்து கண்டிபிடித்ததில், மாலை 5 மணி வாக்கில் அது கடலில் கவிழ்ந்த நிலையில் மிதந்துகொண்டிருந்தது.
மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்; அவர்களில் இருவர் சுயநினைவோடு இருந்தனர். எஞ்சிய மூவரைத் தேடி மீட்கும் பணிகள் தொடருவதாக ஜப்பானியப் போக்குவரத்து அமைச்சு கூறியது.