
ஈப்போ, ஏப்ரல்-21-மலேசியாவிலிருந்து 3 பெண் யானைகளை ஜப்பானுக்கு இடமாற்றம் செய்த பேராக் மாநில அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த இடமாற்றத்தை நிறுத்தக் கோரி இணையத்தில் தொடங்கப்பட்ட பெட்டிஷன் மனுவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இன்று வரைக்குமான நிலவரப்படி, Care2 Petition Site தளத்தில் 106,286 பேர் கையெழுத்திட்டு ஆதரவளித்துள்ளனர்.
தைப்பிங் மிருகக் காட்சி சாலையில் உள்ள Dara, Amoi மற்றும் Kelat ஆகிய அந்த 3 யானைகள், ஜப்பானில் உள்ள Osaka Tennoji உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இருப்பினும், ஜப்பானின் காலநிலை மற்றும் அங்குள்ள சூழல் இந்த வெப்பமண்டல யானைகளுக்குப் பொருந்தாது என வனவிலங்கு ஆர்வலர்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.
அதோடு, யானைக் கூடங்கள் மிகவும் சிறியதாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது; இதை விட, இந்த Tennoji உயிரியல் பூங்கா மீது, மிருகங்களைக் கையாள்வது தொடர்பில் ஏற்கனவே பல புகார்கள் உள்ளன.
நிலைமையை மோசமாக்கும் வகையில், ஜப்பானில் Kelat யானையின் தந்தம் அறுக்கப்பட்டுள்ளதாக செய்தி வைரலாகி வருகிறது.
எனினும், PERHILITAN எனப்படும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறை, அது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையே என தெளிவுப்படுத்தியுள்ளது.
அதே சமயம், இந்த 3 யானைகள் அங்கு அனுப்பப்பட்டதானது ஒரு வணிக ரீதியான விற்பனை அல்ல என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என்றும் பேராக் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், யானைகளின் நலன் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், இந்த விவகாரம் தற்போது மலேசியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



