ஜிஞ்சாங்கில் ஸ்ரீ அமான் PPR அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியிலிருந்து விழுந்த ஆடவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்

கோலாலம்பூர், மார்ச் 28 – ஜிஞ்சாங்கில் ஸ்ரீ அமான் பி.பி.ஆர் குடியிருப்பின் அடுக்ககத்தின் 10 ஆவது மாடியிலிருந்து கார் மீது விழுந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் மருத்துமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மதியம் 12.30 மணியளவில் தங்களது தரப்புக்கு தகவல் கிடைத்ததாக செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அகமட் சுகர்னோ முகமட் ஸஹாரி ( Ahmad Sukarno Mohd Zahari ) தெரிவித்தார். அடுக்கு மாடி வீட்டில் 10 ஆவது மாடியிலிருந்து 25 வயதுடைய ஆடவர் கார் நிறுத்தும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது விழுந்துள்ளார்.
சுயநினைவுடன் இருந்த அந்த ஆடவர் ஆம்புலன்ஸ் வண்டியின் மூலம் உடனடியாக செலயாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அகமட் சுகார்னோ தெரிவித்தார். கார் மீது விழுந்த பின்னர் அந்த ஆடவர் வலியில் துடிக்கும் பல்வேறு காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் உடலை அசைக்கக்கூடிய நிலையில் சுயநினைவில் இருந்ததோடு காரின் கூரைப்பகுதி நசுங்கியிருந்ததையும் அந்த காணொளியில் பார்க்க முடிந்தது. அந்த ஆடவர் 10 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.