
சுபாங் ஜெயா, ஆகஸ்ட்-25 – நாடு முழுவதும் உதவித் தேவைப்படுவோருக்கு உதவும் நோக்கில் ஆண்டு இறுதிக்குள் 200,000 ‘சாரா ரஹ்மா கூடைகளைச்’ சேகரிக்க, மைடின் பேரங்காடி இலக்கு வைத்துள்ளது.
மக்களுக்கு அது பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு, மலேசியர்களிடையே ஒற்றுமையின் மதிப்புகளை வலுப்படுத்தும் என மைடின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ அமீர் அலி மைடின் கூறினார்.
சுபாங் ஜெயாவில் இன்று ‘சாரா ரஹ்மா கூடைத்’ திட்டத்தின் அறிமுக விழாவில் பேசிய போது அவர் அவ்வாறு சொன்னார்.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணையமைச்சர் Datuk Dr Fuziah Salleh அதனை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
‘சாரா அனைவருக்குமானது’ என்ற மடானி அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப, RM100 ரிங்கிட் மதிப்பிலான அவ்வுதவித் தேவைப்படாத பெறுநர்கள் குறிப்பாக உயர் வருமானம் பெறுவோர், அதனை ‘சார ரஹ்மா கூடைகளை’ வாங்கி நன்கொடையாக அளிக்கலாம்.
அத்திட்டம் அறிமுகம் காண்பதன் அடையாளமாக, மைடின் பேரங்காடியும், சுபாங் ஜெயா சமூக நலத் துறைக்கு 50 உணவுக் கூடைகளை அன்பளிப்பாக வழங்கியது,
‘Beli dan Derma’ அதாவது வாங்கி நன்கொடை அளியுங்கள் என்ற முறையின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், ஆகஸ்ட் 31 தொடங்கி நாடு முழுவதும் உள்ள அனைத்து மைடின் பேரடிங்காடிகளும் அமுலுக்கு வரும்.
அதே சமயம், மேலும் ஏராளமானோர் அத்திட்டத்தில் இணைய ஏதுவாக செப்டம்பர் 2 தொடங்கி அமைச்சுகள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் மையங்களுக்கு நடமாடும் டிரக்குகளையும் மைடின் இயக்கவிருக்கிறது.
இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர் குறிப்பாக உயர் வருமானம் பெறுவோர், MyKad அடையாள அட்டையில் RM100 கிடைக்கப் பெற்றதும், அதனை உண்மையிலேயே தேவைப்படுவோருக்கு கொடுத்துதவ இந்த ‘சாரா ரஹ்மா கூடை’ திட்டம் வழிவகுக்கும்.