
பஹாவ், அக்டோபர்-8,
“Pesta Deepavali Prihatin Jeram Padang” நிகழ்ச்சிக்கு, நெகிரி செம்பிலான் ஜெம்போல் நகராண்மைக் கழகம் முறையாக ஒத்துழைப்பு வழங்க மறுத்திருப்பதை, ஜெராம் பாடாங் பெரிக்காத்தான் நேஷனல் ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் விமர்சித்துள்ளார்.
பொது இடத்தை அதுவும் விழாக் காலத்தில் பயன்படுத்த அனுமதி மறுத்தது ஒரு பாகுபாடான முடிவு என அவர் கண்டனம் தெரிவித்தார்.
இதுவே பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி கூட்டணி தலைமையிலான நிகழ்ச்சிகள் என்றால், மொத்த சாலையையும் மூடி, நடுப்பகுதி வரை கூடாரங்களை அமைக்க அனுமதிக்கிறார்கள்.
ஆனால், இந்தியச் சமூகத்திற்கான நலத் திட்டங்களின் போது மட்டும் திடீரென ‘ஒழுங்குமுறை’ என்ற பெயரில் முட்டுக் கட்டைப் போடுகிறார்கள்; இதை சற்றும் ஏற்க முடியாது என, பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
“மக்களுக்கு உதவுவது எப்போதிலிருந்து குற்றமானது?” என கேள்வி எழுப்பிய சஞ்சீவன், இந்நிகழ்ச்சி அரசியல் மேடையல்ல, மாறாக மக்களுக்கான உதவி மற்றும் தீபாவளி உற்சாகத்தைப் பகிரும் முயற்சி மட்டுமே என தெளிவுபடுத்தினார்.
எனவே, ஜெம்போல் நகராண்மைக் கழகத்தின் ஆதரவு இல்லாவிட்டாலும் இந்த தீபாவளி நிகழ்ச்சி திட்டமிட்டபடி தொடரும்.
“அவர்கள் எங்கள் கூடாரத்தை தடுக்கலாம், ஆனால் மக்களுக்கு உதவும் எங்கள் உற்சாகத்தை ஒருபோதும் தடுக்க முடியாது” என சஞ்சீவன் சூளுரைத்தார்.
செப்டம்பர் 30-ஆம் தேதியிடப்பட்ட ஜெம்போல் நகராண்மைக் கழகத்தின் கடிதத்தில், அந்த தீபாவளி நிகழ்ச்சிக்கு சாலைகளில் கூடாரங்களை அமைக்கக் கூடாது என்றும், பொது இடங்கள் அல்லாமல் மண்டபம் போன்ற தனியார் இடங்களில் நடத்த வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.