
ஜெர்மனி, செப்டம்பர் 9 – ஜெர்மனியில், தனது வீட்டிலுள்ள லிப்ட் பழுதடைந்திருந்ததால், நான்கு நாட்கள் உணவும் தண்ணீருமின்றி அதனுள் சிக்கியிருந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லிப்டின் ‘பியூஸ்’ (fuse) சேதமடைந்ததால் அவசர அழைப்பு பொத்தானும் செயலிழந்ததெனவும் நான்கு நாட்களுக்கு பிறகு, வீடு திரும்பிய மகன் தன் தந்தை லிப்டில் சிக்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அவசர சேவை குழுவினருக்கு தகவல் கொடுத்தார் என்றும் அறியப்படுகின்றது.
வெற்றிகரமாக மீட்கப்பட்ட அப்பெரியவர், பல நாட்கள் உணவு உண்ணாமலும் தண்ணீர் அருந்தாமல் இருந்ததால் மிகவும் சோர்வடைந்திருந்தார் என்றும் தற்போது அவர் நலமாக சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
மேலும், தண்ணீர் இல்லாமல் மனிதர்கள் பொதுவாக மூன்று நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்கின்ற நிலையில், அந்த முதியவர் நான்கு நாட்கள் உயிர் பிழைத்தது மிகப்பெரும் அதிர்ஷ்டம் என போலீசார் குறிப்பிட்டனர்.