
கோலாலம்பூர், மார்ச் 21 – துணி மாட்டும் ஹெங்கெரினால் தனது மகனுக்கு காயம் ஏற்படும் அளவுக்கு தாக்கிய தொழிலாளி ஒருவருக்கு
மூன்று நாள் தடுத்துவைக்கும் உத்தரவை பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
எட்டு வயதுச் சிறுவனான தனது மகன் அவனது சைக்கிளை ஓடடிச் சென்று வீட்டின் வேலியில் நேற்று மோதியதைத் தொடர்ந்து அவனது தந்தையான 41 வயது சந்தேகப் பேர்வழி பொறுமை இழந்து அவனை தாக்கியதாக கூறப்பட்டது.
இதனால் அச்சிறுவனின் வலது கைகள், கால்கள் மற்றும் இடுப்பு உட்பட உடலின் பல பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன.
அடி தாங்காமல் அச்சிறுவன் தனது 16 வயது சகோதரியின் அறைக்கு ஓடிச் சென்றதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து நேற்று இரவு யோங் பெங் (Yong Peng )போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததாக கூறப்பட்டது.
ஜோகூர் பாருவில் வசிக்கும் தங்கள் தாயை விவாகரத்து செய்த பிறகு, அந்த சிறுவனும் அவனது சகோதரியும் தங்கள் தந்தையுடன் வசித்து வந்துள்ளனர்.
2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31 ஆவது பிரிவு (1)(a) யின் கீழ் இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாரலனுவார் முஷாடட் சனி ( Shahrulanuar Mushaddat Sani) தெரிவித்தார்.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.