
ஜோகூர் பாரு, ஏப்ரல்-17, ஜோகூர் பாரு, ஜாலான் உங்கு புவானில் அமைந்துள்ள இந்திய மரபுடைமை மையமானது, மாநில இந்தியச் சமூகத்தின் பங்களிப்புகளை ஆவணப்படுத்தும் ஒரு கலாச்சார அடையாளமாக விளங்கி வருகிறது.
114 ஆண்டு கால பழைமை வாய்ந்த அருள்மிகு ராஜ மாரியம்மன் தேவஸ்தான ஆலய வளாகத்தில் அம்மையம் கம்பீரமாக வீற்றிருக்கிறது.
ஆரம்பகால புலம்பெயர்வு – குடியேற்றம் முதல் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் வணிகம் மீதான அதன் தாக்கம் வரை சமூக வரலாற்றின் காப்பகமாக அம்மையம் செயல்படுகிறது.
ஜோகூர் பாரு இந்தியச் சமூகத்தின் வளமான கலாச்சாரம், வரலாறு மற்றும் சமூக பங்களிப்புகளைப் பாதுகாத்து காட்சிப்படுத்த இந்த மையம் அமைக்கப்பட்டதாக, கோயில் செயலாளர் ஜி. சேகரன் கூறினார்.
“இந்த இந்திய மரபுடைமை மையத்தின் மூலம், ஜோகூரின் பன்முக கலாச்சார அடையாளத்தை வடிவமைக்க இந்திய மரபுகள் எவ்வாறு உதவின என்பதை நாங்கள் எடுத்துக்காட்டுகிறோம்”
“இங்கு வரும் பார்வையாளர்கள் பாரம்பரிய இந்திய கலை, ஜவுளி, நகைகள் மற்றும் மத கலைப்பொருட்கள் உள்ளிட்ட மையத்தின் மகத்தான கண்காட்சிகளால் ஈர்க்கப்படுகிறார்கள்,” என்றும் அவர் கூறினார்.
ஜோகூரில் இந்திய மொழிகளின் பரிணாம வளர்ச்சியிலிருந்து கலாச்சார நிகழ்ச்சிகள் வரை, இந்த மையம் பறைசாற்றுகிறது.
2023-ரில் திறக்கப்பட்டதிலிருந்து, உள்ளூர் மற்றும் அனைத்துலகப் பார்வையாளர்கள், குறிப்பாக சிங்கப்பூர், சீனா, தென் கொரியா மற்றும் இந்தியாவிலிருந்து வருகையாளர்களின் அதிகரிப்பைக் கண்டதாக சேகரன் கூறினார்.
இந்த இந்திய மரபுடைமை மையம் தினசரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொது மக்களுக்கு திறந்திருக்கும்.
நுழைவு இலவசமாகும்.