
ஜோகூர் பாருவில் நேற்றிரவு பட்டாசுகள் மற்றும் வான வெடிகள் விற்கும் அங்காடிக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு வாகனங்கள் அழிந்தன.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இரவு மணி 8.32 அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, கம்போங் டத்தோ சுலைமான் மெந்திரி, Majidee Corner 1C என்ற இடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 11 பணியாளர்கள் அனுப்பப்பட்டதாக Larkin தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி நகிஸ் நெக்மத் ( Nakish Nekmat) தெரிவித்தார்.
அங்கு இருந்த புரோட்டான் ஜென்-2 கார் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்து வந்த ஒரு லோரிக்கும் தீ பரவியது.
பட்டாசுகள் மற்றும் வானவெடிகளை விற்பனை செய்யவதற்கு பயன்படுத்தப்பட்ட தற்காலிகக் கூடாரமும் தீயினால் அழிந்தது.
இந்தத் தீ விபத்து தொடர்பான 44 வினாடிகள் கொண்ட காணொளிக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது .
முன்னதாக, நாடு முழுவதும் பட்டாசுகள் மற்றும் வான வெடிகளை விற்கும் வளாகங்களில் 2024 ஆம்ஆண்டு ஏற்பட்ட தீ விபத்துக்களின் 19 சம்பவங்களை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு ஆறு மடங்கு அதிகரித்து 113 ஆக அதிகரித்தன.
கடந்த ஆண்டு ஜோகூரில் 32 சம்பவங்களும், திரெங்கானுவில் 29 சம்பவங்களும் பேராவில் 23 சம்பவங்களும் பதிவானதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இயக்குநர் நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.



