ஜோகூர் பாரு, அக்டோபர்-19 – ஜோகூர் பாருவில் கடத்தப்பட்ட பெரும் தொழிலதிபரை RM20mil பிணைப் பணத்தைக் கொடுத்து அவரின் குடும்பம் மீட்டுள்ளது.
தொழில் பயணமாக அக்டோபர் 13-ஆம் தேதி வீட்டை விட்டு கிளம்பிய போது, சுவாசக் கவசம் அணிந்த மூவர் கும்பலால் அவர் இடைமறிக்கப்பட்டார்.
கட்டையால் அடித்து, தலையை துணியால் மூடி, துப்பாக்கி முனையில் காரிலேற்றி, அவரின் கைகளைக் கடத்தல்காரர்கள் கட்டிப் போட்டனர்.
பின்னர் தொடர்புகொண்டு பிணைப் பணம் கேட்க ஏதுவாக, போகும் போது 59 வயது அந்நபரின் வீட்டு வாசலில் ஒரு கைப்பேசியையும் அக்கும்பல் விட்டுச் சென்றது.
பிறகொரு வீட்டில் அவரை அடைத்து வைத்து, அவரின் குடும்பத்திடம் RM30mil பிணைப் பணம் கேட்டு அக்கும்பல் மிரட்டியது.
பேரம் பேசியதில் அத்தொகை RM20milஆக குறைக்கப்பட்டு, RM5mil ரொக்கம் தாமான் பெர்லிங்கில் உள்ள வீட்டு மனையொன்றில் சேர்க்கப்பட்டது.
எஞ்சியப் பணம், சிங்கப்பூரைச் சேர்ந்த குடும்ப நண்பரின் உதவியால் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டது.
அடுத்த 14 மணிநேரங்களில் தாம் விடுவிக்கப்பட்டதாக, அந்நபர் போலீஸ் புகாரில் கூறினார்.
கடத்தல்காரர்கள் மொத்தம் 4 பேர்; ஒருவர் பெண் என்றார் அவர்.
இவ்வேளையில் அச்சம்பவம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரித்தப் பிறகே எதுவும் கருத்துரைக்க முடியுமென ஜோகூர் போலீஸ் தலைவ டத்தோ எம். குமார் சொன்னார்.