
சிரம்பான், ஆகஸ்ட்-2 – 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறக்கு பாரிசான் நேஷனல் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பதை அடுத்து, நெகிரி செம்பிலானின் புதிய மந்திரி பெசாராக, ஜுவாசே சட்டமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்மாயில் லாசிம் பதவியேற்றுக்கொண்டார்.
ஸ்ரீ மெனாந்தி அரண்மனையில், சற்று முன்னர் மாநில சமஸ்தானாதிபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் முன்னிலையில் 63 வயதான இஸ்மாயில் லாசிம் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
வழக்குரைஞரான இவர், 7 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரு மாநில நிர்வாகங்களின் கீழ் ஆட்சிக் குழு உறுப்பினராகப் பணியாற்றிய நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர்.
குவாலா பிலா அம்னோ தொகுதித் தலைவரும், அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான இவர், நேற்றையத் தேர்தலில், ஜுவாசே தொகுதியில் 4,091 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
மொத்தமுள்ள 36 தொகுதிகளில், 18 தொகுதிகளைப் பாரிசானும், 7 தொகுதிகளை அதன் அதிகாரப்பூர்வமற்ற பங்காளியான பெரிக்காத்தான் நேஷலும் கைப்பற்றியதை அடுத்து, நெகிரியில் இந்தப் புதியக் கூட்டணி ஆட்சி அமைகிறது.
ஆட்சியை இழந்துள்ள பக்காத்தான் ஹராப்பான் வெறும் 11 தொகுதிகளுடன் எதிர்கட்சி வரிசையில் அமருகிறது.



