
ஜோகூர் பாரு, டிசம்பர்-2 – ஜோகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளி வளாகம் ஒன்றில் திருவள்ளுவர் உள்ளிட்ட எந்தவொரு சிலைகளையும் அகற்ற எந்த உத்தரவும் இல்லை என்று மாநிலக் கல்வி இலாகா தெளிவுபடுத்தியுள்ளது.
அவ்வாறு உத்தரவு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களை அது திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் கல்வி இயக்குநர் விரைவிலேயே சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்தாலோசனை நடத்தவுள்ளார்.
மாநிலம் முழுவதும் அதிகாரிகள் மத, இன உணர்வுகளை மதித்து நடப்பதோடு, பள்ளிகளில் ஒற்றுமை நிலைக்க வேண்டும் எனவும் கல்வி இலாகா நினைவூட்டியது.
பன்முக மலேசியச் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை காக்கும் கடப்பாட்டையும் கல்வி இலாகா மீண்டும் வலியுறுத்தியது.
ஜோகூர் தமிழ்ப்பள்ளியில் திருவள்ளுவர் சிலைகளை அகற்ற மாநில கல்வி இலாகா உத்தரவிட்டிருப்பதாக பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின.
அதற்கு சமூகத்தைச் சேர்ந்த பல தரப்புகளிடமிருந்து கடும் கண்டனம் வந்த நிலையில், தற்போது மாநில கல்வி இலாகா இந்த விளக்கத்தை அளித்துள்ளது.



