ஜோர்ஜ் டவுன், ஜன 21 – ஜோர்ஜ் டவுன் மற்றும் புக்கிட் மெர்தாஜாமில் உள்ள பொழுது போக்கு விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு உபசரிப்பு பணியாளர்களாக பணியாற்றிவந்த 35 வெளிநாட்டு பெண்கள் பினாங்கு குடிநுழைவு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட 17 பெண்கள் ஜோர்ஜ் டவுனில் மேற்கொள்ளப்பட்ட முதல் சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் அந்த பொழுதுபோக்கு விடுதியில் நிரந்தரமாகவும் பகுதி நேரமாகவும் வேலை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களில் பலர் இதற்கு முன் நண்பர்களுடன் அந்த பொழுதுபோக்கு மையத்திற்கு வந்ததாக கூறிக்கொண்டனர்.
புக்கிட் மெர்தாஜாமில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட மற்றொரு சோதனையில் வாடிக்கையாளர்களுக்கான உபசரணையாளர்களாக பணியாற்றி வந்த மேலும் 18 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டதை பினாங்கு குடிநுழைவு இயக்குநர் நுர் சுல்பா ( Nur Zulfa ) உறுதிப்படுத்தியதோடு , குடிநுழைவு சட்டத்தை மீறியதன் தொடர்பில் விசாரணைக்காக ஜூருவில் உள்ள குடிநுழைவு தடுப்பு மையத்திற்கு அவர்கள் கொண்டுச் செல்லப்பட்டதாக தெரிவித்தார்.