டாக்டர் மகாதீரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவர்கள் திருப்தி

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 20 – இந்த மாத தொடக்கத்தில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக அவரது அலுவலகத்தினர் தெரிவித்தனர்.
கடந்த 14 நாட்களாக தேசிய இருதய நிறுவனமான IJN-இல் டாக்டர் மகாதீர் சிகிச்சை பெற்று வருவதாக அவரது அலுவலக பேச்சாளர் தெரிவித்தார். இந்நிலையில் சிகிச்சை மற்றும் அவரது உடல் ரீதியான முன்னேற்றம் திருப்திகரமாக இருந்தாலும் Physiotherapy அடிப்படையிலான மீட்பு செயல்முறை நீண்ட காலம் எடுக்கலாம் என்றும் கூறப்பட்டது.
டாக்டர் மகாதீரின் உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். தற்போதைய நிலையில் அவர் வருகையாளர்களைச் சந்திக்க இயலாததற்கு மன்னிப்பும் கேட்டுள்ளனர்.
ஜனவரி 6 ஆம் தேதியன்று, அவர் வீட்டில் வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொண்டபோது தவறி விழுந்ததால் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு, பின்னர் அவர் சுயநினைவுடன் IJN-க்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது வயது முதிர்வு காரணமாக, அவருக்கு அறுவைச் சிகிச்சை இல்லாமல் உடற்பயிற்சி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு வருகிறது.
டாக்டர் மகாதீருக்கு இருதய நோய் வரலாறு உள்ளது என்றும், 1989 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் அவருக்கு இருதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும் அறியப்படுகின்றது. கடந்த ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி அன்று, தனது 100வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சோர்வு ஏற்பட்டதால், அவர் IJN-இல் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



