
வாஷிங்டன், மே-4- போப்பாண்டவர் உடையில் தாம் இருப்பது போன்ற புகைப்படத்தை Instagram பக்கத்தில் பதிவேற்றி சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்.
அடுத்த போப்பாண்டவர் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்’ என நகைச்சுவையாகக் கூறி டிரம்ப் அப்படத்தைப் பதிவேற்றியிருந்தார்.
AI அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இப்படம் தற்போது வைரலாகி கண்டனங்களைக் குவித்து வருகிறது.
அதிபர் என்ற உச்ச அதிகாரத்திலிருப்பவருக்கு, எதிலெல்லாம் விளையாடுவது என்ற ‘இங்கிதம்’ இல்லையா என வலைத்தளவாசிகள் அவரை ‘வறுத்தெடுத்து’ வருகின்றனர்.
கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப்பாண்டவர் பிரான்சிஸ் அண்மையில் காலமானதை அடுத்து, புதியப் போப்பாண்டவர் தேர்வு செய்யப்படுகிறார்.
அதற்காக வத்திகன் சிட்டியில் வரும் 7-ஆம் தேதி கர்தினால்களின் இரகசிய கூட்டம் நடைபெறவுள்ளது.
புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை உலகிற்குத் தெரிவிக்கும் வகையில் புகைபோக்கியும் பொருத்தப்பட்டுள்ளது.