
லிஸ்பன், ஜூலை-6,
விபத்தில் அகால மரணமடைந்த போர்ச்சுகல் மற்றும் லிவர்பூல் கால்பந்து வீரர் டியேகோ ஜோத்தாவின் இறுதிச் சடங்கில் கிறிஸ்தியானோ ரொனால்டோ பங்கேற்காதது, போர்ச்சுகல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்ச்சுகல் தேசிய அணி வீரர்கள், ஒட்டுமொத்த லிவர்பூல் அணியின் ஆட்டக்காரர்கள், ஜோத்தாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மென்சஸ்டர் யுனைட்டெட் கேப்டன் புருனோ ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.
அமெரிக்காவில் கிளப் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்றுள்ள Joao Cancelo, Ruben Neves உள்ளிட்டோர் கூட குறித்த நேரத்தில் வந்து கலந்துகொண்டனர்.
ஆனால் போர்ச்சுகல் கேப்டனான ரொனால்டோவைக் காணவில்லை; இது மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் போர்ச்சுகல் ஊடகங்களும் கடும் அதிருப்தி தெரிவித்தன.
கேப்டன் என்ற முறையில் ரொனால்டோ கண்டிப்பாக இறுதி மரியாதை செலுத்த வந்திருக்க வேண்டும்; வராமல் போனதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் இந்த நேரத்தில் அவர் அதனை நியாயப்படுத்துவது கடினம் என கால்பந்து நிருபர்களும் வர்ணனையாளர்களும் விமர்சித்துள்ளனர்.
ரொனால்டோ இறுதிச் சடங்கில் பங்கேற்றால் இரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் மொத்த கவனமும் அவர் பக்கம் திரும்புமென்றும், அந்த தர்மசங்கடத்தைத் தவிர்க்கவே அவர் நேரில் பங்கேற்கவில்லை என்றும் அவரை மேற்கோள்காட்டி சில செய்திகள் வெளியாகின.
அதே சமயம் தனிப்பட்ட முறையில் ஜோத்தா குடும்பத்தாருக்கு அவர் அனுதாபமும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துக் கொண்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், அதே நாளில் Mediterranean எனப்படும் மத்தியத் தரைக்கடல்
தீவில் தனது தனிப்பட்ட சொகுசுக் கப்பலில் ரொனால்டோ உல்லாசமாக விடுமுறை கழிக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
புகைப்படத்தை பார்த்த போர்ச்சுகல் கால்பந்து இரசிகர்கள் X தளத்தில் தங்கள் ஏமாற்றத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
இறுதிச் சடங்கில் பங்கேற்காமல் போனாலும், உல்லாச விடுமுறையையாவது ரொனால்டோ தவிர்த்திருக்கலாம்.
சக வீரரும் நண்பரும் அகால மரணமடைந்த சமயத்தில் ஒரு கேப்டனுக்கு இது அழகல்ல என வலைத்தளவாசிகள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
திருமணமாகி 2 வாரங்களே ஆன 28 வயது ஜோத்தாவும் அவரின் இளைய சகோதரரும் முன்னதாக ஸ்பெயினில் கார் விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தனர்.