
புது டெல்லி, மே-7, வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த 100 விழுக்காடு வரி திட்டம், இந்தியத் திரைப்படத் துறைக்கு பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியத் திரைப்படத் துறை, தனது வெளிநாட்டு வருமானத்தில் சுமார் 40 விழுக்காட்டை அமெரிக்காவிலிருந்து சம்பாதிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்புதிய வரி “வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது” என எதை குறிக்கிறது என்று தெளிவாகத் தெரியவில்லை.
இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் கவலையில் உள்ளனர்; post-production எனப்படும் தயாரிப்புக்குப் பிந்தையப் பணிகள் வரை பாதிக்கப்படுமா என்பதும் கேள்வியாக உள்ளது.
272,000 பேரை வேலை வாய்ப்பில் வைத்திருக்கும் இந்தியத் திரைப்படத் துறை, அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட பெரும் பார்வையாளர்களை நம்பியுள்ளது.
இப்புதிய வரியால், படங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான செலவை இரட்டிப்பாக்கலாம்; இதனால் டிக்கெட் விலை உயரும், பார்வையாளர்களும் குறைவர்.
அதே சமயம், ஹோலீவூட் படங்களுக்கான visual effects பணிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதும் குறையலாம்.
பெரிய படங்கள் திட்டமாற்றம் செய்யப்படலாம்; நடுத்தர படங்களுக்கு வருமானத்தில் 30 விழுக்காடு வீழ்ச்சி கூட ஏற்படக்கூடும்.
இதனால், திரையரங்க வெளியீடுகளுக்கு பதிலாக நேரடியாக Netflix, Amazon Prime போன்ற டிஜிட்டல் தளங்களில் வெளியீடு செய்யும் போக்கு வேகமாக மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது