டிரம்ப்புக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து; மலேசிய-அமெரிக்க உறவு வலுப்பெற விருப்பம்

புத்ராஜெயா, ஜனவரி-22 – அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுள்ள டோனல்ட் டிரம்ப்புக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மலேசிய-அமெரிக்க இரு வழி உறவை வலுப்படுத்துவதில், டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்துப் பணியாற்ற தாம் ஆர்வமுடன் உள்ளதாக அவர் சொன்னார்.
2025 ஆசியான் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் மலேசியாவுக்கு வருகைத் தருமாறும் டத்தோ ஸ்ரீ அன்வார் டிரம்ப்புக்கு அழைப்பு விடுத்தார்.
உள்நாட்டு மற்றும் அனைத்துலகச் சவால்களைத் தனக்கே உரிய பாணியில் எதிர்கொள்வதில் பெயர் பெற்றவர் டிரம்ப்.
அதிபராகப் பதவியேற்கும் முன்னரே, காசா போர் நிறுத்த உடன்பாட்டில் டிரம்ப் பெரும் பங்காற்றியிருப்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
78 வயது டிரம்ப் நேற்று இரண்டாவது தவணையாக அதிபராகப் போறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் ஏற்கனவே 2017 முதல் 2021 வரை அதிபராக இருந்துள்ளார்.