
அலோர் காஜா, ஆகஸ்ட்-16 – மலாக்கா, டுரியான் துங்காலில் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது – சீக்கிரமாக தூங்கச் செல்ல வேண்டுமென வளர்ப்புத் தாய் கூறியதால், அவரிடம் கோபித்துக் கொண்டு 10 வயது சிறுமி வீட்டை விட்டே ஓடியிருக்கிறாள்.
மறுநாள் காலை பள்ளிக்குச் செல்ல சீக்கிரமாக எழ வேண்டும் என்பதாலேயே தாய் அவ்வாறு கூறினாலும், அச்சிறுமி கோபத்தில் இரவு நேரத்தில் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில், இரவு 11 மணியளவில் Taman Belimbing Setia-வில் சாலையோரம் தனியாக நின்றிருந்த அச்சிறுமி, அவ்வழியே சென்ற ஒரு தம்பதியின் கண்ணில் பட, அவர்கள் டுரியான் துங்கால் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று சிறுமியை பாதுகாப்பாக விட்டனர்.
பின்னர் சுமார் 1 மணி நேரத்தில் வளர்ப்புத் தாய் வந்து அச்சிறுமியைக் கூட்டிச் சென்றார்.
முன்னதாக, வெள்ளை நிற உடையணிந்து தனியாக நடந்து சென்ற குழந்தை ஒருவர் காப்பாற்றப்பட்டார் என்ற செய்தி வாட்சப்பில் பரவியது; அந்தக் குழந்தையின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்திற்கு வருமாறும் போலீசார் கேட்டுக்கொண்டிருந்தனர்.