
கோலாலம்பூர், ஜூலை 9 – இவ்வார தொடக்கத்தில் மலேசியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுமென்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வரி பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
மலேசியா ஒரு வர்த்தக நாடு என்றும், ஒருதலைப்பட்சமாக அமல்படுத்தப்படும் வரிகள் நாட்டின் பொருளாதாரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்பதால் அமெரிக்க வெளியுறவுச் செயலாளருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
ஹலால் இறக்குமதி மற்றும் பூமிபுத்ரா பங்குத் தேவைகள் மீதான மலேசியாவின் கடுமையான விதிகளை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR) முன்னர் அடையாளம் கண்டு அவைகளுக்கு 24 சதவீத வரியும் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த மே மாதம் நடந்த ஒரு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தின் போது, பூமிபுத்ரா கொள்கை, உள்ளூர் விற்பனையாளர் தேவைகள் மற்றும் மூலோபாயத் துறைகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய தேசியக் கொள்கைகள் அமெரிக்க கட்டணப் பேச்சுவார்த்தைகளில் மாறாமல் இருக்கும் என்று அன்வார் உறுதியளித்துள்ளார்.