
தடையை மீறி SOGO-வில் திரண்ட சாம்ரி வினோத் கைது; அருண் துரைசாமி, இரு உரிமை போராட்டவாதிகளும் தடுத்து வைப்பு
Zamri Vinoth arrested; Arun Doraisamy and two URIMAI activists also detained
கோலாலம்பூர், பிப்ரவரி-8,
‘சட்டவிரோதமாகக்’ கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு, போலீஸாரின் தடையையும் மீறி கோலாலம்பூர் SOGO-வில் திரண்டதற்காக ஏற்பாட்டாளர் சம்ரி வினோத் கைதான நிலையில், சமூக ஆர்வலர் அருண் துரைசாமியும் கைதுச் செய்யப்பட்டுளார்.
அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதனை உறுதிப்படுத்தினார்.
எனினும் எதற்காக அவர் கைதானார் என்ற தகவல் இல்லை.
பாதுகாப்புப் காரணங்களால் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் அங்கு திட்டமிட்டபடி கூடுவோம் என சூளுரைத்த சாம்ரி, பேரணிக்கு முன்பே கைதானார்.
அவரோடு அரசு சார்பற்ற அமைப்பினர், அரசியல் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலரும் கைதுச் செய்யப்பட்டனர்.
சுமார் 200 போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குவிக்கப்பட்டிருந்த நிலையில், போலீஸ் உத்தரவை மீறிய ஒருவரும் தனியாகக் கைதுச் செய்யப்பட்டார்.
சிறிய சலசலப்பு ஏற்பட்டாலும் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.
இதனிடையே, உரிமைக் கட்சியின் சிலாங்கூர் பிரதிநிதிகளான Cikgu Sekar எனப்படும் குணசேகரன், சாய் சரவணா ஆகியோர் டாங் வாங்கி போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டதாக, அக்கட்சியின் செயலாளர் சத்தீஸ் முனியாண்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எதற்காக அவர்கள் கைதானார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை; என்றாலும் இது தேவையற்றது என சத்தீஸ் கூறினார்.
ஒருவேளை SOGO பேரணி தொடர்பில் அவர்கள் கைதுச் செய்யப்பட்டிருக்கலாம்; ஆனால் அப்படி பார்த்தாலும், நேற்று நடைபெற்ற எந்தவொரு சம்பவத்திற்கும் அவர்களுக்குத் தொடர்பில்லை.
இந்து கோயில் பணிப்படை இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தத் திட்டமிட்டிருந்த பேரணியும், போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் இரத்துச் செய்யப்பட்டு விட்டது.
ஆக, எந்தவொரு சட்டமீறலும் செய்யாத நிலையிலும் Cikgu Sekar, சாய் சரவணா இருவரும் கைதுச் செய்யப்பட்டிருப்பதை உரிமைக் கண்டிப்பதாக சத்தீஷ் சொன்னார்.
சாம்ரி உள்ளிட்டோரின் நேற்றையக் கைது நடவடிக்கை குறித்து போலீஸ் இன்னும் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.
இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் செய்தியாளர் சந்திப்பையோ அல்லது முழு அறிக்கையையோ வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



