
குவாலா லிப்பிஸ், ஏப்ரல்-8, பஹாங், குவாலா லிப்பிஸில் கைப்பேசியில் பேசுவதற்காக தந்தை சாலையோரமாகக் காரை நிறுத்திய போது, அவருக்கே தெரியாமல் காரிலிருந்து விழுந்து 3 வயது மகன் காயமடைந்தான்.
இச்சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் கம்போங் தெம்போயான் அருகே, ஜாலான் லிப்பிஸ் – மெராப்போ சாலையின் 5-ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
மகன், பின்னிருக்கை கண்ணாடி வழியாக சாலையில் விழுந்தது அறியாமல், கைப்பேசியில் பேசி முடித்ததும் தந்தைப் பயணத்தைத் தொடர்ந்திருக்கின்றார்.
சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகே காரினுள் மகன் இல்லாதது கண்டு பதற்றத்தில் திரும்பி வந்து தேட ஆரம்பித்தார்.
எங்குத் தேடியும் மகன் கிடைக்காமல் போகவே, கடைசியாக குவாலா லிப்பிஸ் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
எனினும், சாலையில் விழுந்ததில் முகத்தில் அடிபட்ட நிலையில் அச்சிறுவன் தனியாக கிடந்ததை, அவ்வழியே சென்ற பொது மக்கள் பார்த்துள்ளனர்.
பாடாங் தெங்கு போலீஸ் நிலையம் கொண்டுச் செல்லப்பட்டு பின்னர் கிளினிக்கிற்கும், அங்கிருந்து சிகிச்சைக்காக குவாலா லிப்பிஸ் மருத்துவமனைக்கும் அச்சிறுவன் கொண்டுச் செல்லப்பட்டான்.
பின்னர் தந்தையிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டதை உறுதிப்படுத்திய லிப்பிஸ் மாவட்ட போலீஸ், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டது.