
தெஹ்ரான், ஏப்ரல்-10-ஈரானிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei), தனது தந்தை ஆயதொலா அலி கமேனி (Ayatollah
Ali Khamenei) கொலை செய்யப்பட்டதற்காக பழிவாங்குவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் அவரது தந்தை உயிரிழந்தார்.
இதற்கு பதிலடி தவிர்க்க முடியாது என்றும், அதற்குப் பொறுப்பானவர்கள் நிச்சயம் தண்டனையை அனுபவிப்பார்கள் என்றும் மொஜ்தபா தெரிவித்தார்.
தந்தைக் கொல்லப்பட்ட பிறகு ஈரானின் புதிய உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டு சுமார் 1 மாதம் ஆன நிலையில், மொஜ்தபா இவ்வாறு சூளுரைத்துள்ளார்.
அதே நேரத்தில், உண்மையில் முழுமையான போரை ஈரான் விரும்பவில்லை என்றாலும், இறையாண்மையைக் காக்க தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கடமை என்றும் அவர் சொன்னார்.
மொஜ்தபாவின் நீண்ட உரை, ஈரானிய அரசாங்க தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகியது.
உச்சத் தலைவரானதிலிருந்து அவர் இன்னும் பொதுவெளியில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வப்போது அவர் பெயரில் அறிக்கைகள் மட்டுமே வெளியாவதால், அவரின் உடல்நிலை மற்றும் நிர்வாக திறன் குறித்து சந்தேகங்களும் எழுந்துள்ளன.
தனது தந்தைக் கொல்லப்பட்ட அதே தாக்குதலில் மொஜ்தபாவும் காயமடைந்து, சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



