
கோலாலம்பூர், ஏப்ரல்-26- தனியார் பல் கிளினிக்குகளில் விதிக்கப்படும் சிகிச்சைக் கட்டணங்கள், மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன.
கட்டுப்பாடற்ற நிலையில் அக்கட்டணங்கள் இருப்பதாக பொது மக்களிடமிருந்து தமக்கு ஏராளமான புகார்கள் வந்திருப்பதாக, மஇ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா கூறினார்.
தலைக்கு 500 ரிங்கிட் முதல் 2,500 ரிங்கிட் வரை கட்டணமாக விதிக்கப்படுவது சற்று அதிகபட்சமாகும்.
அதுவும் பொருளாதார அழுத்தம் மற்றும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு மக்களுக்குப் பெரும் சவாலாக உருவாகியிருக்கும் இந்நேரத்தில், இது போன்ற உயரியக் கட்டணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே, சுகாதார அமைச்சும், உள்நாட்டு வாணிப – வாழ்க்கைச் செலவின அமைச்சும், தனியார் பல் கிளினிக்குளின் சிகிச்சைக் கட்டணங்களை ஒழுங்குப்படுத்தி சீராக்க வேண்டும்.
மக்களின் சுகாதாரப் பராமரிப்பை எவரும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை உறுதிச் செய்ய இது முக்கியமாகும்.
இவ்விவகாரத்தை சம்பந்தப்பட்ட தரப்புகள் உடனடி கவனம் செலுத்தி கையாள வேண்டும்.
கூடுதல் நிதிச் சுமைக்கு ஆளாவதிலிருந்து பயனீட்டாளர்களைக் காப்பாற்றி அவர்களின் உரிமைகளையும் அரசாங்கம் காத்திட வேண்டுமென டத்தோ முருகையா அறிக்கை வாயிலாகக் கேட்டுக் கொண்டார்