
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-16, பினாங்கில், இதற்கு முன் தனியார் வாடகை வீட்டிலிருந்து விரட்டப்பட்ட ஓர் இந்திய குடும்பத்துக்கு, ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ முயற்சியில் மாநில அரசின் வாடகை வீடு கிடைத்துள்ளது.
பாடாங் கோத்தாவில் வீடற்ற நிலையில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட அக்குடும்பம், தற்காலிகமாக சமூக நலத் துறையின் அஞ்சோங் சிங்கா காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டது.
பிறகு ஏப்ரல் 3-ஆம் அக்குடும்பத்தை நேரில் சந்தித்த டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ, பினாங்கு மாநில அரசின் வாடகை வீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.
அவர்களும் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க, பரிசீலனைக்குப் பிறகு அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் 11-ஆம் தேதி டத்தோ ஸ்ரீ சந்தரராஜூவே நேரில் சென்று அக்குடும்பத்துக்கு புதிய வாடகை வீட்டுக்கான சாவியை வழங்கினார்.
அக்குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகளின் எதிர்கால கல்வியைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு சிறப்பு கவனம் செலுத்தி வழங்கிய உதவி இதுவாகும்.
வெளியில், இன்னும் எத்தனையோ இயலாத குடும்பங்கள் வாடகை வீட்டிலிருந்து விரட்டப்படும் அபாயத்தில் உள்ளன.
அதற்காக, மாநில அரசின் வாடகை வீடுகளுக்கு விண்ணப்பிப்பதில், இந்த ஒரு சம்பவத்தை முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது என அவர் தெளிவுப்படுத்தினார்.
ஒவ்வொரு விண்ணப்பமும் முறையான ஆவணங்களுடனும் நேர்முகத் தேர்வு வழியாகவும் தான் பரிசீலிக்கப்படும்.
உண்மையிலேயே உதவித் தேவைப்படுவோருக்கு மட்டுமே இந்த வாடகை வீடுகள் கிடைப்பதை உறுதிச் செய்ய, குடும்ப வருமானம் 1,500 ரிங்கிட்டுக்கு மேற்போகாமல் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பினாங்கில் மட்டுமே வெறும் 100 ரிங்கிட் மாத வாடகையில் இவ்வீடுகள் வழங்கப்படுகின்றன.
எனவே பினாங்கு மாநில அரசின் வாடகை வீடு கிடைத்தவர்கள், இதுவொரு நிரந்தரச் சலுகையாக நினைக்கக் கூடாது;
மாறாக, பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலில் புதிய வாழ்க்கையைத் தொடங்க கிடைத்த வாய்ப்பாகக் கருத வேண்டுமென, பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ சொன்னார்.