
புத்ராஜெயா, செப்டம்பர்-19 – 6 தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள 30 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி தொடர்பான ஆலோசனை கூட்டம், இன்று புத்ராஜெயாவில் நடைபெற்றது.
அதற்கு கல்வி துணை அமைச்சர் வோங் கா வோவும், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனும் இணைந்து தலைமையேற்றனர்.
ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 4 -ஆம் தேதிகளில் நடைபெற்ற கலந்தாய்வுகளின் தொடர்ச்சியாக இந்தக் கூட்டம் நடைபெற்றதாக ரமணன் தெரிவித்தார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, இக்கூட்டத்திற்கு இம்முறை தலைமை ஆசிரியர்களும் பள்ளி மேலாண்மை குழுவினரும் அழைக்கப்பட்டனர்.
பேராக், கிளேபாங் தமிழ்ப் பள்ளி, சிலாங்கூர், நோர்த் ஹம்மோக் தமிழ்ப் பள்ளி, ஜோகூரில் கூலாய் பெசார் தமிழ்ப் பள்ளி மற்றும் ரினி தோட்டத் தமிழ்ப் பள்ளி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இன்றையச் சந்திப்பில் பங்கேற்றனர்.
இத்திட்டத்தில் சம்பந்தப்பட்ட மேலுமிரண்டு பள்ளிகள் – முறையே பேராக் YMHA தமிழ்ப் பள்ளி, பினாங்கு சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளி ஆகியவையாகும்.
தேசியக் கல்வி அறக்கட்டளை மற்றும் மாநில கல்வித் துறை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
வகுப்பறைகள், ஆய்வுகூடம், நூலகம், பாதுகாப்பு வசதிகள் மற்றும் அடிப்படை பராமரிப்பு ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த கல்வி வசதிகளை வழங்க மடானி அரசாங்கம் உறுதியாகச் செயல்படுவதாக ரமணன் வலியுறுத்தினார்.