
கோலாலம்பூர், நவம்பர்-10, நாட்டு மக்களின் சுமையைக் குறைக்கும் தற்காலிக நடவடிக்கைகளை விட, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக் கூடிய நீண்ட கால திட்டங்களே அவசியமாகும்.
ம.இ.கா தேசியப் பொருளாளர் டத்தோ என்.சிவகுமார் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு தற்காலிக உதவிகள் மட்டுமே போதாது.
நிரந்தரத் தீர்வே முக்கியமென்பதை மக்கள் பிரதிநிதிகளும் புரிந்துகொண்டு பேச வேண்டும்.
அதை விடுத்து, சதா காலமும் தற்காலிகத் தீர்வுகளைப் பாராட்டுவதிலேயே நேரத்தை செலவிடக் கூடாது.
2025 வரவு செலவுத் திட்டம் மீதான மக்களவை விவாதத்தின் போது PKR கட்சியின் பேராக் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன் பேசியிருந்ததை டத்தோ சிவகுமார் சுட்டிக் காட்டினார்.
பட்ஜெட் ஒதுக்கீட்டை தற்காத்து பேசிய கேசவன், ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்தின் வாயிலாக 700,000 இந்தியர்கள் பயனடைந்திருப்பதாகக் கூறினார்.
அதை நாம் மறுக்கவில்லை; ஆனால், அது ஒரு தற்காலிகத் தீர்வே என்பதை அவர் மறந்து விட்டார்.
பட்ஜெட்டை பாராட்டிப் பேசும் அதே வேளை, சமுதாயத்திற்காகவும் அவர் பேசியிருக்க வேண்டும்.
இந்தியர்கள் குறிப்பாக புறநகர் பகுதியில் வாழ்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் பரிந்துரைகளையும் கேசவன் முன்வைத்திருந்தால் சிறப்பு என டத்தோ சிவகுமார் தனதறிக்கையில் கூறினார்.