
கோலாலம்பூர், மார்ச்-11 – தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்களை போதிக்கும் விவகாரத்தில், பள்ளிகள் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையைப் பின்பற்ற வேண்டும்.
தலைமையாசிரியர்களுக்கும் பள்ளி முதல்வர்களுக்கும் அதனை நினைவுப்படுத்துமாறு, அனைத்து மாநிலக் கல்வி இயக்குநர்களையும் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் கூடுதல் பாடங்களாக தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வகுப்புகள் குறித்து பத்திரிகைகளிலும் டிக் டோக் வீடியோக்களிலும் வைரலாகியுள்ள விவகாரம் தொடர்பில், அமைச்சு இந்த நினைவூட்டலை விடுத்துள்ளது.
மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை எடுத்துப் படிக்க வாய்ப்பு வழங்குவதில், அமைச்சு உறுதியாக உள்ளது.
அதன் காரணமாகத் தான், பன்முக மலேசியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பள்ளிகளில் தமிழ் மொழி உள்ளிட்டவை கூடுதல் பாடங்களாக போதிக்கப்படுகின்றன.
தமிழ்ப் பள்ளிகளில் முக்கியப் பாடமாகவும், SK எனப்படும் தேசியப் பள்ளிகளில் கூடுதல் விருப்பப் பாடமாகவும் தமிழ் மொழி போதிக்கப்படுகிறது.
தேசிய இடைநிலைப் பள்ளிகளிலும் மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்கும் உரிமையும் ஒருபோதும் மறுக்கப்பட்டதில்லை.
1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டத்திற்கு ஏற்ப, குறைந்தது 15 மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டால், இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும் கூடுதல் பாடங்களாகப் போதிக்கப்படலாம்.
அதற்காக, தமிழ் மொழி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், கற்றல்-கற்பித்தல் உபகரணங்களை தருவித்தல், தமிழ்ப் பள்ளிகளுக்கான ஆதரவு என பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சு எடுத்து வருகிறது.
பள்ளிகளில் தமிழ் மொழிப் பாட ஆசிரியர்களுக்கான காலியிடங்களும் உரிய முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.
எனவே, பாட அட்டவணையில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களுக்கு உரிய முறையில் தெரிவிக்க வேண்டும்;
முன்னேற்பாடுகளைச் செய்ய இந்த தகவல் தொடர்பு சுமூக இருப்பது அவசியமாகுமென அமைச்சு நினைவுறுத்தியது.