
தெஹ்ரான், ஸ்ரீப்ரல்-9-ஒரே நாளில் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு, புதியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதால் மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல், லெபனானில் நடத்திய வான் தாக்குதல்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
இஸ்ரேலின் இந்நடவடிக்கையால், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான Hormuz நீரிணையை ஈரான் மீண்டும் மூடியுள்ளது.
இதனால், அமைதி ஒப்பந்தத்திலிருந்து தாங்கள் விலக வாய்ப்பிருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தை குறைக்க, பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வைத்து இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் உண்மை நிலவரத்தைப் பாத்தால், நிலைமை இன்னும் நிலைத்தன்மையின்றி இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
லெபனானில், ஹெஸ்புல்லா தரப்பு இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்தியுள்ள நிலையில், அதன் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடருகின்றன.
கேட்டால், லெபனானில் மேற்கொள்ளப்படும் தனது இராணுவ நடவடிக்கைகள் இந்த ஈரான்-அமெரிக்க ஒப்பந்தத்தில் அடங்கவில்லை என்று இஸ்ரேல் நியாகம் கற்பிக்கிறது.
புதன்கிழமை நடத்திய மிகப் பெரியத் தாக்குதல்களால் பல பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டதுடன், 112 உயிரிழப்புகள் பதிவாகி சுமார் 900 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2-வார போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் நிம்மதியடைந்த அனைத்துலக சமூகம் இதனால் மீண்டும் கவலையடைந்துள்ளது.



