
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – பினாங்கிலுள்ள கடை உரிமையாளர் ஒருவர் ஜாலூர் ஜெமிலாங்கை தலைகீழாக ஏற்றிய குற்றச்சாட்டில், அந்நபரை வரும் புதன்கிழமைக்குள் நீதிமன்றத்தில் நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அம்னோ இளைஞர் அணி தலைவர் டத்தோ டாக்டர் முகமது அக்மல் சாலே எச்சரித்திருந்த நிலையில் தற்போது அதனை கைவிட்டுள்ளார்.
அந்நபர் மீது வருகின்ற புதன்கிழமைக்குள் குற்றச்சாட்டுகள் ஏதும் பதிவுச் செய்யப்படவில்லை என்றால், வியாழக்கிழமை நேரடியாக சென்று தேசிய கொடியை எவ்வாறு சரியாக ஏற்றுவது என்பதை தான் கற்றுக் கொடுக்கவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் அவர் ஆவேசமாக கூறியிருந்தார்.
அக்மால் அவ்வாறு செய்தால் DAP ஒரு பெரும் மலேசியக் கொடியை அக்கடை முன்பு தொங்கவிட்டு 831 சிறு கொடிகளை மக்களுக்கு விநியோகிக்கும் என்றும் அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்திருந்தார்.
59 வயதான கடை உரிமையாளர் நேற்று கைது செய்யப்பட்டதை அடுத்து, போலீசார் விசாரணை அறிக்கையை சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.அதே சமயத்தில் மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங், பொதுவெளியில் அச்சுறுத்தல்களை வெளியிடுவதை அக்மல் நிறுத்த வேண்டுமென்று அறிவுறுத்தியிருந்தார்.
தேசியக் கொடியை மக்கள் மதிக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றாலும் சட்ட அமலாக்கம் ஒருபோதும் அரசியல் எச்சரிக்கைகளின் மூலம் நடத்தப்படக்கூடாது என்பதனை அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் இத்தகைய மிரட்டல்கள் எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பதோடு மக்கள் ஜாலூர் ஜெமிலாங்கை பெருமையுடன் ஏற்றுவதற்கு பதிலாக, பயத்துடன் யாரும் ஏற்றாத நிலை ஏற்படுமென்றும் அவர் கூறியிருந்தார்.இந்நிலையில் அக்மால் தமது போராட்டத்தை கைவிட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.