
கோலாலம்பூர், ஆகஸ்ட்-20 – அடுத்தாண்டு‘2026 மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு’என்பதால், சுற்றுப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலக்கை அடையும் நோக்கில், சுற்றுலாத் தலங்களில் மேம்பாடும், மறுசீரமைப்பும், சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் விளம்பர நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சுற்றுலா விளம்பரத்தில் ஊடகங்களில் பங்கு மிகவும் அளப்பரியது.
இதனைக் கருத்தில் கொண்டு, ‘2026 மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு’ இயக்கத்தின் விளம்பர நடவடிக்கைகளை Tourism Malaysia நிறுவனம் ஊடகவியலாளர்களுடன் தொடங்கியது.
அவ்வகையில் அண்மையில் உள்ளூர்-வெளியூர் ஊடகங்களை பிரத்தியேகமாக அழைத்து கோலாலாம்பூரின் அழகை Tourism Malaysia சுற்றிக் காட்டியது.
குறுகிய சுற்றுலா தலமாகவும் transit இடைமாற்ற இடமாகவும் நாட்டின் முக்கிய நுழைவாயிலாக கோலாலம்பூர் திகழ்வதை பறைசாற்றும் வகையில் அங்கிருந்து இது தொடங்கியது.
பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம், புக்கிட் பிந்தாங், ஜாலான் அலோர் உணவு வீதி, கம்போங் பாரு, பசார் செனி, சைனாடவுன், பத்து மலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் சுற்றிக் காட்டப்பட்டன.
இந்த விளம்பர நடவடிக்கைகளில், கோலாலம்பூரிலிருந்து குறுகிய பயணங்களுக்கு ஏற்ற அருகிலுள்ள இடங்களை Tourism Malaysia எடுத்துக் காட்டிய அதே வேளை, பினாங்கில் உள்ள ஜோர்ஜ்டவுன் போன்ற பிற மாநிலங்களின் தனித்துவத்தையும் அறிமுகப்படுத்துகிறது.
TMM2026 பிரச்சாரம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை உட்படுத்திய வட்டாரச் சந்தைகளை வலுப்படுத்துவதை வலியுறுத்துகிறது.
அதோடு, முஸ்லீம் தோழமை பேக்கேஜுகள், சுற்றுச்சூழல் சுற்றுலா, கலாச்சார பாரம்பரியம், குடும்ப சுற்றுலா மற்றும் நிலையான இடங்களையும் இது கொண்டுள்ளது.
கோலாலம்பூரை மலேசியாவின் அழகை ஆராதிப்பதற்கான தொடக்கப் புள்ளியாக கொண்டு, 2026-ஆம் ஆண்டுக்குள் மில்லியன் கணக்கான சுற்றுப்பயணிகளை வரவேற்க நாடு தயாராக உள்ளது.
இதனை மக்களிடமும் சுற்றுப் பயணிகளிடமும் கொண்டுச் சேர்க்கும் முக்கியப் பணியை ஊடகங்கள் ஆற்ற வேண்டுமென்றும் Tourism Malaysia கேட்டுக் கொண்டது.