
தாவாவ் சபா, ஜூலை 3 – தாவாவ்வில் இருக்கும் ‘லிட்டில் கலிப்ஸ்’ (Little Caliphs) மழலையர் பள்ளி ஒன்றின், விளையாட்டு தினத்தில், போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் திடலில், எதிர்பாராத விதமாக திசைமாறி திடீரென பாராசூட்டில் தரையிறங்கிய மலேசிய கடற்படை வீரரின் (Royal Malaysian Navy) காணொளியை அப்பள்ளியில் பயிலும் குழந்தையின் பெற்றோர் ஒருவர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
தவறுதலாக இடம் மாறி தரையிறங்கி இருந்தாலும், அது அன்றைய நிகழ்வின் சிறப்பம்சமாகவே மாறியுள்ளது என்றும் மைதானத்தில் குழுமியிருந்த குழந்தைகளும் பெற்றோர்களும் உற்சாகமடைந்து அவரை சுற்றி வளைத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதையும் காணொளியில் காண முடிந்தது.
பள்ளியில் தரையிறங்கிய அந்த Navy வீரர், கடந்த ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தவாவில் நடைபெற்ற சிவில் இராணுவ ஒத்துழைப்பு (CIMIC) கார்னிவல் 2025 இன், பாராசூட் செயல்திறனில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடற்படை வீரர் ஒருவர் பாராசூட்டில் லாவகமாக தரையிறங்குவதைப் பார்க்கும் குழந்தைகள், தாங்களும் எதிர்காலத்தில் ஒரு Navy வீரராக உருவாக வேண்டும் என்ற உயரிய எண்ணத்தை விதைப்பார்கள் என்று நெட்டிசன்கள் கருத்துரைத்து வருகின்றனர்.