
தாசேக் கெளுகோர், ஜூலை-13- பினாங்கு, தாசேக் கெளுகோர், கம்போங் செலாமாட்டில் உள்ள 3 பன்றிப் பண்ணைகளில் ASF எனப்படும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.
ஆய்வுக்கூட சோதனையில் இது உறுதிச் செய்யப்பட்டதாக, மாநில கால்நடை சேவைத் துறையின் இயக்குநர் Dr சாய்ரா பானு மொஹமெட் ரெஜாப் கூறினார்.
இதுவரை 2 பண்ணைகளில் 50 பன்றிகள் மடிந்துள்ளன; மேலும் ஏராளமான பன்றிகளிடம் இந்த ASF காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
இதையடுத்து, பன்றிக் காய்ச்சல் பரவியுள்ள பண்ணைகளுக்கு பன்றிகளை இடமாற்றம் செய்ய உடனடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
மற்ற பண்ணைகளுக்கோ அல்லது மாவட்டங்களுக்கோ அந்நோய்க்கிருமி பரவுவதைத் தடுக்க இது அவசியமென சாய்ரா பானு தெரிவித்தார்.
சுற்று வட்டார பன்றிப் பண்ணைகளில் ஆரம்ப கட்ட அறிகுறிகளைக் காட்டும் பன்றிகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு, உயிரி பாதுகாப்புக் கண்காணிப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பண்ணைகளில் சந்தேகத்திற்குரிய வகையில் பன்றிகள் மடிந்துபோகும் பட்சத்தில் உடனடியாக தங்களிடம் தெரியப்படுத்துமாறு, பன்றிப் பண்ணை நடத்துநர்களை சாய்ரா பானு கேட்டுக் கொண்டார்.
இந்த ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவாது; என்றாலும் பன்றிப் பண்ணைத் தொழிலைப் பெரிதும் பாதிக்கும்.
குறிப்பாக கால்நடை இடமாற்றத் தடையால் பண்ணையாளர்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
கம்போங் செலாமாட்டில் 63 பன்றிப் பண்ணைகளில் 120,000 பன்றிகள் வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.