
கோலாலம்பூர், செப்டம்பர்-23,
மின்சார (EV) SUV காரை ஓட்டிவந்த பெண் ஒருவர், தானியங்கி பார்க்கிங் அமைப்பை (Automatic Parking System – APS) இயக்கியபின், கார் தன்னிச்சையாக நகரத் தொடங்கியதால் அதனைத் துரத்திச் சென்ற காட்சி வலைத்தளத்தில் பெரும் வைரலாகியுள்ளது.
பதிவான வீடியோவில், பெண் காரை விட்டு இறங்கி APS அம்சத்தை செயல்படுத்தியபின், வாகனம் திடீரென கட்டுப்பாடின்றி நகர்ந்து வேறு ஒரு பார்க்கிங் இடத்தை நோக்கிச் சென்றது.
அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வாகனம் மற்ற கார்களை மோதாமல் இருக்க அதனைத் துரத்திச் சென்று நிறுத்த முயற்சித்தார்.
இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதும் உலகம் முழுவதுமுள்ள இணையவாசிகள் பல்வேறு நகைச்சுவையான கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர்.
அதே வேளை எந்தவித விபத்தும் அல்லது காயங்களும் ஏற்படாததால் நிம்மதி நிலவினாலும், இந்தச் சம்பவம் நவீன வாகனங்களில் உள்ள தானியங்கி ஓட்டுநர் உதவி (driver-assistance) தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதங்களை எழச் செய்துள்ளது