
புத்ராஜெயா, பிப்ரவரி-1 – மதம் குறித்த அறிக்கைகளை வெளியிடும்போது, தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதன் மூலம் உணர்ச்சிப்பூர்வமான அம்சங்களைத் தொடுவதைத் தவிர்க்க முடியுமென, இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ மொஹமட் நாயிம் மொக்தார் தெரிவித்துள்ளார்.
பன்முகத்தன்மை கொண்ட மலேசியச் சமூகத்தில் பரஸ்பர மரியாதை நிலைநிறுத்தப்பட வேண்டியது அவசியமென்றார் அவர்.
தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும் என்பதால், நாம் பேசும் பேச்சுகள், வெளியிடும் அறிக்கைகள் என எல்லாவற்றிலும் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம் சமூகம் தொடர்பான விஷயங்களில் கருத்து தெரிவிக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அமைச்சர்களுக்கு, குறிப்பாக முஸ்லீம் அல்லாதவர்களுக்கு, அம்னோவின் உலாமாக்கள் மன்றம் விடுத்த நினைவூட்டல் குறித்து அவர் கருத்துரைத்தார்.