
கோலாலம்பூர், டிசம்பர்-11 – தாமோ அல்லது கோலாலாம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானமோ உள்ளூர் அர்ச்சகர்களுக்கு ஒருபோதும் விரோதி அல்ல!
மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ N. சிவகுமார் இவ்வாறு கூறியுள்ளார்.
அதே சமயத்தில், பினாங்கு மாநில குருக்கள் சங்கமும் வட மாநில அர்ச்சகர்கள் சங்கமும் வெளியிட்ட அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் தம் மீதான தனிமனித தாக்குதல் எனவும் அவர் கண்டித்துள்ளார்.
தாம் கூறியவற்றை புரிந்துகொள்ளாமல் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருப்பதாக சிவகுமார் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு சில முக்கிய ஆலய சடங்குகளுக்கும் கும்பாபிஷே நிகழ்வுகளுக்கும் வெளிநாட்டிலிருந்து வரும் அர்ச்சகர்களின் பங்களிப்பு அவசியமாகும்; அதற்காக உள்ளூர் அர்ச்சகர்கள் அவற்றில் பங்குப்பெறக்கூடாது என தாமோ மஹிமாவோ ஒருபோதும் கூறவில்லை.
மலேசியாவில் உள்ள அர்ச்சகர்களும் இந்தியாவுக்குச் சென்றுதான் முறைப்படி வேதங்களைக் கற்றுக்கொள்கின்ற நிலையில், அந்நாட்டு குருக்கள்களை மட்டும் தேவைக்கு ஏற்ப அழைத்து பூஜைகளைச் செய்ய அனுமதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என அவர் கேள்வி எழுப்பினார்.
“ஆலயங்களை வைத்து அரசியல் செய்யும் ஒரு சில அரசியல் தலைவர்களின் கருத்துகளுக்கு அடிப்பணிவதைக் காட்டிலும் உள்நாட்டு குருக்களுக்கு இருக்கும் அடிப்படை சிக்கல்களைக் களையப் பினாங்கு மாநில குருக்கள் சங்கமும் வட மாநில அர்ச்சகர் சங்கமும் முயற்சியை மேற்கொள்ளலாமே” என சிவகுமாரும் கூறியுள்ளார்.
குறிப்பாக உள்ளூர் குருக்களுக்கு கல்வி, அங்கீகாரம், EPF மற்றும் PERKESO போன்ற அடிப்படை பாதுகாப்புகளை வழங்க அவர்கள் முயற்சிக்கலாமே என்றார் அவர்.
இதனிடையே, மஹிமா எப்போதும் உண்மைக்கும் தெளிவான நோக்கத்திற்கும் தான் செயல்படும் எனவும் சிவகுமார் நினைவூட்டினார்..



