
கோலாலம்பூர், டிச 8 – கம்போடியாவுக்கும் – தாய்லாந்துக்குமிடையே புதிதாக ஏற்பட்ட ஆயுத மோதல் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்ததோடு அவ்விரு ஆசியான் நாடுகளும் உடனடியாக பதட்டத்தை விரைந்து முடிவுக்கு கொண்டுவந்து பேச்சுக்களை நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார். தாய்லாந்தும் , கம்போடியாவும் நெருக்கமான பங்காளிகள் என்பதோடு ஆசியானின் மிக முக்கிய உறுப்பினர்களாகவும் உள்ளனர். தகராறுகளுக்கு அமைதியான தீர்வு மற்றும் ஒத்துழைப்பை பொறுத்தே ஆசியானின் நிலைத்தன்மை இருப்பதாக அன்வார் சுட்டிக்காட்டினார். அவ்விரு நாடுகளும் கூடுதலாக பொறுமை காத்து , திறந்த தகவல் தொடர்பு மற்றும் , நடைமுறையில் உள்ள வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்ளவதாக தனது முகநூல் பதிவில் அன்வார் வலியுறுத்தினார்.
இன்று முன்னதாக, கம்போடியாவுடனான சர்ச்சைக்குரிய எல்லையில் தாய்லாந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. போர் நிறுத்த உடன்பாட்டை மீறியதாக இரு நாடுகளும் ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டிக்கொண்டன.
கம்போடிய துப்பாக்கிச் சூட்டில் தங்கள் துருப்புக்கள் சிக்கியதைத் தொடர்ந்து, கிழக்கு மாநிலமான உபோன் ராட்சதானியில் (Ubon Ratchathani) இரண்டு பகுதிகளில் ஏற்பட்ட புதிய மோதல்களில் குறைந்தது ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதோடு , நால்வர் காயமடைந்ததாக தாய்லாந்து ராணுவம் கூறியது.



