திடீர் திருப்பம்: தட்சிணாமூர்த்திக்கு இன்று பிற்பகலே சிங்கப்பூரில் தூக்கு; 3 மணிக்கு உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு குடும்பத்தாரிடம் தெரிவிப்பு

சிங்கப்பூர், செப்டம்பர்-25,
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்காக இன்று காலை தூக்கிலிடப்படவிருந்து, பின்னர் அது நிறுத்தி வைக்கப்பட்ட 39 வயது மலேசியர் கே. தட்சிணாமூர்த்திக்கு, இன்று பிற்பகலில் அத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த திடீர் மாற்றம் குறித்து அவரின் குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டு, பிற்பகல் 3 மணிக்கு வந்து உடலைப் பெற்றுச் செல்லுமாறும் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சமூக ஆர்வலரும் முன்னாள் வழக்கறிஞருமான எம். ரவி அதனை வணகம் மலேசியாவிடம் உறுதிப்படுத்தினார்.
இது ஒரு “மிருகத்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனை” என்றும் அவர் சாடினார்.
காலையில் நிறைவேற்றப்படவிருந்த தட்சிணாமூர்த்தியின் தூக்குத் தண்டனையை ஒத்திவைக்க, நள்ளிரவுக்குப் பிறகு முடிவெடுக்கப்பட்டது.
எனினும் காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை
இதையடுத்து அவரின் குடும்பம் சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தற்காலிக தடை உத்தரவு கோரி விண்ணப்பித்தது.
அதற்குள் திடீரென தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது; காலையில் காரணமில்லாமல் ஒத்தி வைத்து, பின்னர் திடீரென அதனை நிறைவேற்றியிருப்பது விசித்திரமாக இருப்பதாகவும் ரவி குறிப்பிட்டார்.
இச்சூழ்நிலையில், போதைப்பொருள் கடத்தல் குறித்த விழிப்புணர்வின் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார்.
போதைப்பொருள் சிக்கிய கட்சிக்காரர்களுக்கு என்னதான் நீதிமன்றத்தில் தாங்கள் வாதாடினாலும், சமூகத்தில் இது குறித்து விழிப்புணர்வு வரும் வரை இப்பிரச்னைக்குத் தீர்வில்லை என்றார் அவர்.
44.96 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலுக்காக தட்சிணாமூர்த்தி 2011-ல் சிங்கப்பூரில் கைதுச் செய்யப்பட்டு, 2015-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
2022-ல், அவர் தனது தண்டனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததால், தூக்குத் தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
அவர், தற்போது சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் நான்கு மலேசியர்களில் ஒருவராவார்.
மற்றவர்கள் பி. பன்னீர் செல்வம், எஸ். சாமிநாதன், மற்றும் ஆர். லிங்கேஸ்வரன் ஆவர்.
இவர்களின் உயிரைக் காப்பாற்ற மலேசிய மனித உரிமை ஆணையம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.