![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/09/MixCollage-17-Sep-2024-07-43-PM-8153.jpg)
கோலாலம்பூர், செப்டம்பர்-17 – நமது திருமுறைகள் வெறும் பண்பாட்டு வழித்தடமல்ல; மாறாக நமது பழங்காலச் சின்னங்களையும் பெருமைகளையும் எதிர்காலத்திலும் இளையோர் மத்தியில் நிலைநிறுத்தும் ஒரு பாலமாகும்.
இந்தப் பழம்பெரும் பண்பாடு அழிந்து விடாமல் காக்கப்பட வேண்டும் என, பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் வலியுறுத்தினார்.
சிலாங்கூர், பத்துமலையில் நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் 46-வது தேசியத் திருமுறை போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கேற்று பேசிய போது அவர் அவ்வாறு சொன்னார்.
பொருளாதாரத்தோடு, கலை, பண்பாடு ஆகியவற்றையும் மேம்படுத்தும் பிரதமர் டத்தோர ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தூரநோக்கு, இந்த திருமுறைப் போட்டியில் எதிரொலித்தது.
நாடு முழுவதும் 16,000-க்கும் மேற்பட்டோரை இணைத்திருக்கும் இப்போட்டியில் நம் பிள்ளைகள் வெளிப்படுத்தியிருந்த திறமைகளையும் அவர்களின் ஆழ்ந்த ஈடுபாட்டையும் கண்டு வியக்கிறேன்.
இளையோருக்குத் திருமுறைகளைக் கொண்டு சேர்க்கவும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் மேற்கொள்ளப்படும் இந்நிகழ்வுக்கு ஆதரவளிப்பதில் தான் எல்லையில்லா ஆனந்தமும் பெருமையும் கொள்வதாக சண்முகம் குறிப்பிட்டார்.
முன்னதாக ஜோகூர், மலாக்கா, கெடா, கிளந்தான், பினாங்கு, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், கோலாலம்பூர், பஹாங் ஆகிய 10 மாநிலங்கள் அளவில் அப்போட்டி நடத்தப்பட்டது.
ஜனவரி தொடங்கி ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெற்ற போட்டிகளுக்கும், இந்த இறுதிச் சுற்றுக்கும் பிரதமரின் சார்பாக சண்முகம் மூக்கன் 230,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கி ஆதரவு நல்கியது குறிப்பிடத்தக்கது.